திருப்பூரில் தவெக கட்சிக்கொடிகள், துண்டுகள் தயாரிப்பு ஆர்டர் அதிகரிப்பு
|கார் முன் கட்டும் கொடி ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்,
பனியன் தொழில் நகரான திருப்பூரில் பின்னலாடைகள் தயாரிப்பு மட்டுமில்லாமல் அரசியல் கட்சியினருக்கான கொடிகள், துண்டுகள், பேட்ஜ்கள் தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள், பேட்ஜ்கள், மப்ளர் துண்டுகள் திருப்பூரில் அதிகம் தயாராகி விற்பனையானது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள விஜய், மாவட்டம் வாரியாக சென்று நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இப்போதே அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவரை வரவேற்கும் வகையில் கட்சிக்கொடிகள், பேட்ஜ்கள் தயாரிக்க உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
கார் முன் கட்டும் கொடி ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொடிக்கம்பத்தில் ஏற்றவும், கைகளில் பிடித்து செல்வதற்கான கொடிகள் ஆர்டர் அதிகம் வருகிறது.