அ.தி.மு.க. நிர்வாகியின் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை
|அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. கல்லூரி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஜம்முநாதபுரம் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகி இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கல்லூரிகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளங்கோவன், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர் ஆவார். தற்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதனிடையே கோவையில் உள்ள இளங்கோவனின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், "எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை மட்டுமே நடைபெறுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.