தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
|மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், நீரோடைகளில் தண்ணீர் வரத்து உள்ளதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 4 நாட்கள் வழங்கப்பட்டு இருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் வனத்துறை மற்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.