< Back
மாநில செய்திகள்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
27 Oct 2024 11:16 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுபோன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 95 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்-அமைச்சர் அவர்கள் கூறினாலும், 95 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான சம்பளம் மத்திய அரசு திட்ட நிதியில் இருந்து 10,000 ரூபாயும், மாநில அரசு நிதியில் இருந்து 2,500 ரூபாயும் என 12,500 ரூபாய் வழங்கப்படுகிறது என்று பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். வேறு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை.

இதேபோன்று பத்து லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு தரப்படும் என்று ஓராண்டுக்கு முன்பு சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாத சம்பளத்தை முன்னதாக வழங்கவேண்டும் அல்லது ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் அல்லது வட்டியில்லா முன்பணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். அதற்குக் கூட தி.மு.க செவி சாய்க்க மறுக்கிறது என்பது வேதனை அளிக்கும் செயல் ஆகும்.

அறப்பணி செய்யும் ஆசிரியர்களை அலையவிடுவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தீபாவளிப் பண்டிகையை பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாக வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்