விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்
|தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் கழிவறைகள் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி,
திரைப்பட முன்னணி நடிகர் விஜய், அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டுள்ள அவர், தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27-ந் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
85 ஏக்கர் மாநாட்டு திடலில் மேடை 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் கட்சி தலைவர் விஜய், முதலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர், அங்கிருந்து மாநாட்டு மேடைக்கு செல்லும் வகையில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை விஜய் சந்திப்பதற்காக 800 மீட்டர் நீளத்திற்கு ரேம்ப் வாக் செல்கிறார். இதற்காக ரேம்ப் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடத்தை இரவிலும் பகல்போல் காட்சி அளிக்கும் வகையில் 937 கம்பங்கள் நடப்பட்டு, அதில் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது. இந்த மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிரும் பட்சத்தில் மாநாட்டு திடலை இரவு நேரத்திலும் பகலாக்கி விடும்.
மாநாட்டு திடலை முழுமையாக கண்காணிக்க 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மாநாட்டுக்குள் நுழைய 5 வழிகளும், மாநாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 வழிகளும் அமைக்கப்படுகிறது. தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் கழிவறைகள் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக 207 ஏக்கர் இடம் தயார் நிலையில் இருக்கிறது. மாநாட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மாநாட்டு திடலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.