கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஏற்பாடுகள் தீவிரம்
|திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
கன்னியாகுமரி,
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி அரசு சார்பில் வருகிற 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது.
முதல் 2 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் 30-ந் தேதி மதியம் கன்னியாகுமரி வருகிறார். அன்றைய தினமே திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்ணாடி கூண்டு பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
இதனையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள லேசர் விளக்குகள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இந்த கண்காட்சியானது சுமார் 30 நிமிடங்கள் வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகிசிவம் பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்ச்சியை பார்த்து விட்டு இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
பின்னர் மறுநாள் காலையில் திருவள்ளுவர் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன்பிறகு வெள்ளி விழா மேடைக்கு வந்து உரையாற்றுகிறார். பிறகு 1-ந் தேதி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இதுதவிர விழாவையொட்டி 30-ந் தேதி அன்று பூம்புகார் நிறுவன கைவினை பொருட்கள் அங்காடி திறப்பு, திருக்குறள் நெறி பரப்பும் 25 பேருக்கு சிறப்பு பரிசு வழங்குதல், "திருக்குறளில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவைப்படுவது தனி மனித கருத்தே, சமூக கருத்தே" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் சிங்கப்பூர் அரசின் சட்டத்துறை மந்திரி சண்முகம் கலந்து கொள்கிறார். 31-ந் தேதி திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல், தினம் ஒரு திருக்குறள் நூலின் புதிய பதிப்பு வெளியிடுதல், திருவள்ளுவர் பசுமைப்பூங்கா திறந்து வைத்தல், திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல், திருவள்ளுவர் சிலை முன் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல், திருவள்ளுவர் சாலை பெயர் சூட்டுதல் ஆகியவை நடக்கிறது.
1-ந் தேதி திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், நாதஸ்வரம் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவுக்காக அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. விழா மேடையின் இருபுறமும் ஓய்வு அறைகள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒரு அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மற்றொரு அறையில் அமைச்சர்களும் ஓய்வு எடுக்க வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை தெரியும் வகையில் மேடை அமைக்கப்படுகிறது. மேலும் விழா பந்தலில் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமர தனித்தனியாக இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. விழா பந்தலுக்கு தற்போதே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.