சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி கோர்ட்டில் ஆஜர்
|வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 15-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது , அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார்.
செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கவுதமன், பரணிகுமார் ஆகியோர், இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.குறுக்கு விசாரணைக்காக சாட்சி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணையை எப்படி ஒத்திவைப்பது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், அமலாக்கத்துறை தரப்பில் விசாரணையை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை 15-ந் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினார்.