< Back
மாநில செய்திகள்
நீங்கள் நடத்தினால் போராட்டம்.. நாங்கள் நடத்தினால் நாடகமா? - சீமான் ஆவேசம்
மாநில செய்திகள்

நீங்கள் நடத்தினால் போராட்டம்.. நாங்கள் நடத்தினால் நாடகமா? - சீமான் ஆவேசம்

தினத்தந்தி
|
31 Dec 2024 7:05 PM IST

எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுகவுக்கு இப்போது என்ன ஆனது என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை,

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நான் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை விட்டு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீமானை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது;

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி என்னை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தேவையற்ற ஒடுக்குமுறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இன்று மட்டும் கைதுசெய்தது ஏன்? நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரியாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது.

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் எப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? போராடவும் பேசவும் அனுமதி மறுப்பது ஏன்? நீங்கள் நடத்தினால் போராட்டம்.. நாங்கள் நடத்தினால் நாடகமா? யார் அந்த சார்? குற்றம் நடக்கும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் போவது எப்படி? எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுகவுக்கு இப்போது என்ன ஆனது?

நீங்களும் கேள்வி கேட்கமாட்டீர்கள், எங்களையும் கேட்க விடுவதில்லை. யாரும் இதைப்பற்றி பேசக்கூடாது என அண்ணா பல்கலை. விவகாரத்தை மறக்கடிக்க வேண்டும் என சொல்வது ஏற்புடையதல்ல."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்