ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
|ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் - அறிவியல் மையத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சரியாக சென்றடைகிறதா? என்பதை நேரில் சென்று கேட்கும் வகையில், 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து உள்ளார். அதன்படி, முதல் முறையாக கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பணியை தொடங்கியுள்ளார்.2 நாட்கள் கோவையில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் - அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவையின் அறிவுச்சின்னமாக எழவுள்ள 'தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மையத்துக்கான அடிக்கல்லை நாட்டி, அப்பொழுதே திறப்பு விழாவுக்கான நாளையும் உறுதியாக அறிவித்தேன். கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன். மாவட்டம்தோறும் - தொகுதிதோறும் – ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன்… உங்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும். என தெரிவித்துள்ளார்.