< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு போட மாட்டேன் - சபதம் எடுத்த அண்ணாமலை
மாநில செய்திகள்

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு போட மாட்டேன் - சபதம் எடுத்த அண்ணாமலை

தினத்தந்தி
|
26 Dec 2024 4:37 PM IST

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு இனி மரியாதை கொடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குற்றவாளி தி.மு.க.வில் இருந்தது எங்கள் கோபம் இல்லை. தி.மு.க.வில் இருந்துகொண்டு தான் தொடர் குற்றங்களை செய்துள்ளார் அவர். தி.மு.க. எனும் போர்வை இருந்ததால்தான் இந்த குற்றவாளி அந்த பெண் மேல் கை வைத்துள்ளான்.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்வது வெட்கமாக இல்லையா? சிசிடிவி கேமராவுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூற வெட்கமாக இல்லையா?. நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சிசிடிவி கிடையாது. நான் காவல்துறையில் இருந்திருந்தால் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும்.

படிக்காதவன் கூட ஒழுங்காக எப்.ஐ.ஆர் எழுதுவான். அந்த பெண்தான் குற்றம் செய்ததுபோல் அந்த எப்.ஐ.ஆரை எழுதியுள்ளார்கள். அதை எழுதியவருக்கு வெட்கமாக இல்லை. அந்த பெண்ணின் விபரங்களை எல்லாம் கூறி அந்த பெண்ணின் குடும்பத்தையே நாசம் பண்ணிவிட்டீர்கள். அந்த மாணவியை அவமானப்படுத்திவிட்டனர். கோர்ட்டில் இந்த முதல் தகவல் அறிக்கை ஏற்கப்படுமா? முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது?

விரச கதைகளைப் போன்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். மாணவியை அவமானப்படுத்த பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் எப்படி வெளிவந்தது? காவல் துறையினரை தவிர வேறு யார் வெளியிட முடியும்.

நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் கைது பண்ணுவீர்கள். நாளையில் இருந்து ஆர்ப்பாட்டம் அப்படி ஒன்று நடக்காது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு இனி மரியாதை இல்லை. ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது. எதுக்கு அரசியல் கட்சியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும், இனி மரியாதையெல்லாம் கிடையாது.

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு போட மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்; விரதம் இருந்து முருகனிடம் முறையிடப் போகிறேன். இந்த விவகாரத்தில் நாம் எல்லோருமே சாமானிய மனிதர்களாக தலை குனிந்து நிற்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் அண்ணாமலை, தனது கால்களில் இருந்த ஷூக்களையும் கழற்றிவிட்டு வெறுங்காலுடன் நடந்து சென்றார்.

மேலும் செய்திகள்