< Back
மாநில செய்திகள்
மக்கள் விருப்பப்பட்டால் மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மக்கள் விருப்பப்பட்டால் மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினத்தந்தி
|
31 Oct 2024 1:54 AM IST

விஜய் மாநாட்டை அனைவரும் பாராட்டும் வகையில் நடத்தி இருக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியையொட்டி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் இங்கு வருகிறோம். அ.தி.மு.க. சார்பில் தேவருக்கு செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நல்லாட்சி காலத்தில் செய்யப்பட்டவை. மக்கள் விருப்பப்பட்டால் ராமநாதபுரத்தில் மீண்டும் போட்டியிடுவேன்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மாநாட்டை அனைவரும் பாராட்டும் வகையில் நடத்தி இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் எந்த இலக்கை நோக்கி செல்கிறார் என்பதை பார்த்துதான், இனி கருத்து சொல்ல முடியும். எங்களை பொறுத்தவரையிலும், தமிழக மக்கள், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் தூய தொண்டர்களை பொறுத்தவரையில் அ.தி.மு.க. ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது என்பதை உறுதியாக கூறுகிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு 3 லட்சம் வாக்குகள் எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 33 சதவீதம் பெற்ற ஒரே சுயேச்சை வேட்பாளர் நான்தான் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த வகையில் பொதுமக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. என்னை தோற்கடிக்க 6 பன்னீர்செல்வத்தை தேர்தல் களத்தில் இறக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். 2026-ம் தேர்தலின்போது நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்