உதயநிதியுடன் விவாதிக்க நான் தயார் - ஆர்.பி.உதயகுமார்
|சவால் விடுவதை விட மக்களை காப்பதுதான் முக்கியம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை,
திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பதை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அத்துடன், யார் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் என விவாதிக்க தயாரா? என முதல்-அமைச்சரை நோக்கி கேள்வியெழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றும், நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் எனவும் தெரிவித்தார். அத்துடன், திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது எனவும் வினவினார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுடன் விவாதித்த தயாராக இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என கூறினார். அத்துடன், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியும், அனுபவமும் இல்லை என கூறிய ஆர்.பி.உதயகுமார், சவால் விடுவதை விட மக்களை காப்பதுதான் முக்கியம் என தெரிவித்தார்.