நிலத்தகராறில் கணவன்,மனைவி வெட்டிக்கொலை - கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்
|நிலத்தகராறில் அண்ணன் மற்றும் அண்ணியை தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (37 வயது). இவரது மனைவி ருக்குமணி (30 வயது). மாரிமுத்துவுக்கும், அவரது தம்பி முருகனுக்கும் (28 வயது) இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த தகராறு முற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் முருகன் தனது அண்ணன் மாரிமுத்துவின் வீட்டுக்கு திடீரென வந்தார். அங்கு மாரிமுத்துவையும், அவரது மனைவியையும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி விட்டு தப்பி விட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன்-மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தீபாவளி நாளில் நடந்த இந்த இரட்டை கொலை அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடன் பிறந்த அண்ணன் மற்றும் அண்ணியை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிய முருகனை சாம்பல்பட்டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.