< Back
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் விஷ மாத்திரை தின்று கணவன் - மனைவி தற்கொலை
மாநில செய்திகள்

கடன் தொல்லையால் விஷ மாத்திரை தின்று கணவன் - மனைவி தற்கொலை

தினத்தந்தி
|
5 Jan 2025 10:18 AM IST

திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் விஷ மாத்திரை தின்று கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் மங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர், திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களின் மகன் கதிரீஸ்வரன். இவர், திருச்சியில் தங்கி இருந்து, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் நாகேந்திரன், சாந்தி மட்டும் திண்டுக்கல் மங்களாபுரம் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 10.30 மணிக்கு சாந்தி அக்கம்பக்கத்தினரிடம் தானும், கணவரும் விஷ மாத்திகளை தின்று விட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணிக்கு சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அதிகாலை 2.30 மணிக்கு நாகேந்திரன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் கதிரீஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், நாகேந்திரன் குடும்ப செலவுகளுக்கு பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் போதிய வருமானம் இல்லாததால், கடன்களை திரும்ப கொடுக்காமல் தவித்து வந்தார். எனவே கடனை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு வற்புறுத்தி வந்தனர்.

இதனால் மனமுடைந்த 2 பேரும் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரைகளை (விஷ மாத்திரை) தின்று தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்