< Back
மாநில செய்திகள்
எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்-அமைச்சரே? - அண்ணாமலை கேள்வி
மாநில செய்திகள்

எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்-அமைச்சரே? - அண்ணாமலை கேள்வி

தினத்தந்தி
|
30 Dec 2024 1:18 PM IST

மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்-அமைச்சரே? என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ""பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" எனப் புதுமைப் பெண்கள் குறித்து பாரதி கண்ட கனவை புதுமைப் பெண் திட்டம் மூலமாக நம்முடைய திராவிட மாடல் அரசு நனவாக்கியிருக்கிறது.

இதன் நோக்கம், பள்ளியின் படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் இருக்கின்ற மாணவிகளுக்கு நம்முடைய ஆட்சியில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது கல்வி வளர்ச்சி! அதுவே ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது சமூகப் புரட்சி. உயர்கல்வி பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் நான் ஓயமாட்டேன் என்று பேசினார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சரின் இந்த பேச்சு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்-அமைச்சர் அவர்களே?.

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சிதான் இந்த திராவிட (Disaster Model)டிசாஸ்டர் மாடல்." என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்