< Back
மாநில செய்திகள்
இளையராஜா விவகாரத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்..? - தருமபுரம் ஆதீனம் கேள்வி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

"இளையராஜா விவகாரத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்..?" - தருமபுரம் ஆதீனம் கேள்வி

தினத்தந்தி
|
18 Dec 2024 2:32 AM IST

கோவில் அர்த்தமண்டபத்திற்குள் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் தவிர எவருக்கும் அனுமதியில்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் வாசலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு தியாகேசா பெருமானுக்கு நடந்த முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனையில் ஆதீனம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இசை அமைப்பாளர் இளையராஜா, தனது விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம் என சொல்லிவிட்டார். எனவே, இதுகுறித்து மேலும் விவாதம் தேவையில்லை. யார் எங்கு நின்று வழிபாடு நடத்த வேண்டும் என்பது ஒரு மரபாக இருக்கிறது. இரண்டு தரப்பிலும் மாற்று கருத்து இருக்கிறது. அங்கு என்ன நடந்தது என்பதை நான் நேரில் பார்க்கவில்லை.

நான் தற்போது நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே செல்லவில்லை. இங்குள்ள சிவாச்சாரியார்கள் தான் எனக்கு பிரசாதம் வழங்கினார்கள். நான் வெளியில் இருந்து வாங்கி கொண்டேன். அதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கும். இளையராஜா அரசிடம் சொல்லிவிட்டா கோவிலுக்கு சென்றார். இதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்?." என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்