< Back
மாநில செய்திகள்
வேளச்சேரியில் வீடுகளை அகற்றும் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மாநில செய்திகள்

வேளச்சேரியில் வீடுகளை அகற்றும் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தினத்தந்தி
|
25 Nov 2024 9:30 PM IST

வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளார்கள். இதற்காக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வேளச்சேரி ஜெகநாதபுரம் மக்கள் சாலையில் அமர்ந்து இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு நிலவரம் குறித்து விளக்கினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வேளச்சேரி ஏரியின் நீர் இருப்பு இல்லாத பகுதிகள் 2005-ம் ஆண்டிலேயே வகைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் நீர் ஆதாரங்களை எந்த ஒரு நிலையிலும் வகைமாற்றம் செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜெகநாதபுரம், சசிநகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 955 பேர் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற வகையில் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நீர் பகுதிகளில் இல்லை என்று சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2018ல் சூமோட்டாவாக எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் குடியிருப்புவாசிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது இந்த வீடுகளை பயோமெட்ரிக் செய்ய வேண்டும் என்ற உத்தரவு வந்தது. இதற்கான பணிகள் கிடப்பில் இருந்தது. அதன்பிறகு அரசுக்கு அளிக்கப்பட்ட நீதிமன்ற அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பயோமெட்ரிக் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பயோமெட்ரிக் பணிகளில் ஈடுபடுவதற்கு காரணம் எப்படியாவது இந்த மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதற்காக தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்