நெல்லையில் பயங்கரம்.. பட்டப்பகலில் கோர்ட்டு முன் வாலிபர் வெட்டிக்கொலை - பரபரப்பு பின்னணி
|நெல்லையில் கோர்ட்டு முன் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை,
நெல்லை அருகே கீழநத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் மாயாண்டி (23). கொலை முயற்சி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று காலையில் மாயாண்டி நெல்லை கோர்ட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கோர்ட்டில் இருந்த மாயாண்டி பின்னர் கடைக்கு செல்வதற்காக கோர்ட்டுக்கு வெளியே சென்றார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் கோர்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கோர்ட்டு முன் கொடூர கொலை
அப்போது அங்கு காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட மர்மகும்பல் வந்து இறங்கியது. அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாயாண்டி தப்பிச் செல்ல முயன்றார். ஆனாலும் அவரை சுற்றி வளைத்த 3 பேர் கோர்ட்டு முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் சிலரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உய்க்காட்டானும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். மாயாண்டியை வெட்டிக்கொன்ற 3 பேரும் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர். மற்ற 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கோர்ட்டு முன் வக்கீல்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
பழிக்குப்பழியாக கொலை
பிடிக்கப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த முருகேசனின் மகன் ராமகிருஷ்ணன் (25) என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினரான நாராயணசாமி மகன் ராஜாமணி (30) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் மாயாண்டி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். எனவே, ராஜாமணி கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீசில் சரண்
இதற்கிடையே, கோர்ட்டு முன் மாயாண்டியை கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்ற 3 பேரும் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கமகேஷ் (21), நாராயணன் மகன் மனோஜ் என்ற மனோராஜ் (27), ரமேஷ் மகன் சிவா (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை
இந்த சூழலில், கொலை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்டு, சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.