< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
3 Nov 2024 9:44 PM IST

தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதுமட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.

அதன்படி இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. பில்லர்ராக், குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திரும்பி பார்க்கும் இடங்களில் எல்லாம் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, மற்றும் குதிரை சவாரி செய்தும் குதூகலித்தனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள மலர்களின் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்