தொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
|தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
பழனி,
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. எனவே தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். இதனால் கோவில் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக அதிகாலை முதலே அடிவாரம், படிப்பாதை, பாதவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
படிப்பாதை வழியாக பக்தர்கள் திரளாக மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டனர். அதேபோல் சாமி தரிசனம் செய்ய பொது, கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னதி சென்று தரிசனம் செய்தனர். சுமார் 2½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தரிசன வழிகள் மட்டுமின்றி அன்னதானம் சாப்பிடவும் பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். தற்போது ரோப்காரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அதன் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே முதியோர்கள், குழந்தைகளுடன் வந்தவர்கள் மின்இழுவை ரெயில் வழியாக செல்ல அதிகமாக வந்தனர். எனவே மின்இழுவை ரெயில்நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சென்று வந்தனர்.