< Back
மாநில செய்திகள்
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - மு.க.ஸ்டாலின் கண்டனம்
மாநில செய்திகள்

எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - மு.க.ஸ்டாலின் கண்டனம்

தினத்தந்தி
|
19 Nov 2024 2:44 PM IST

இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை மிதித்து பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தநிலையில், இன்று காலை முதல் அதன் இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது. மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் வாடிக்கையாளர்களும் இந்தி தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் எல்.ஐ.சி. இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-

எல்.ஐ.சி இணையதளம் இந்தி திணிப்பதற்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்திற்கு மாற்றினாலும் இந்திலேயே தோன்றுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீது வலுக்கட்டாயமாக ஒற்றை மொழியை திணிக்கும் செயல் இது. எந்த தைரியத்தில் எல்.ஐ.சி. இப்படி பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கிறது? மொழிக்கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்