
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழகத்தில் எப்பொழுதும் இருமொழிக் கொள்கைதான். இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டிற்குள் இந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழியே அழிந்துவிடும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.1,000 வழங்க ஏற்பாடு
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என்று மத்திய கல்வி மந்திரி மிரட்டுகிறார். ஆனால், இவர் மிரட்டினால் பயப்பட நாம் அதிமுக அல்ல; திமுக. இங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்கவில்லை; மு.க.ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்திய ஒன்றியம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது. பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். பாசிசத்தின் மிரட்டலுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.1,000 வழங்க ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.