< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலையில் உயர்மட்ட பாலம் சேதம்: தமிழக அரசு விளக்கம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் உயர்மட்ட பாலம் சேதம்: தமிழக அரசு விளக்கம்

தினத்தந்தி
|
3 Dec 2024 8:34 PM IST

அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் உயர்மட்ட பாலம் சேதம் அடைந்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.15.90 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி திறந்து வைத்தார்.

இந்த நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தரம் குறைந்த பாலம் கட்டப்பட்டது எப்படி? தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லையா என அப்பகுதி கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் பெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் பாலம் சேதமடைந்தது.

பாலத்தின் நீளம் - 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் – 12 மீ, ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் - 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் - 7 மீ. நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் 54,417 கன அடி. திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.

தற்போது, பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்