சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - வடமாநில பெண் கைது
|சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று திரும்பி வந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 14 பார்சல்கள் இருந்தது தெரியவந்தது.
அதில் காலிபிளவர் மற்றும் காளான் ஆகியவற்றின் இடையே உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சுமார் 6 கிலோ எடை கொண்ட அந்த உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.6 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.