< Back
மாநில செய்திகள்
எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை  உத்தரவு
மாநில செய்திகள்

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தினத்தந்தி
|
13 March 2025 11:33 AM IST

நெரூரில் சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு நாளில் நடைபெறும் எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆந்திராவைப் பூர்விமாக கொண்ட சதாசிவரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன். இவர் பலரிடம் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமண வாழ்க்கையில் பற்றில்லாத சிவராமகிருஷ்ணன், காடு மலைகளில் அலைந்து திரிந்தார். பின்னர், துறவியான அவர், வைசாக சுத்த தசமியன்று நெரூர் காவிரி கரையில் வில்வமரத்தடியில் அவர் ஜீவசமாதியானார். இந்நாள் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜீவசமாதி அடைந்ததன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதி பக்தா்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு அங்கப்பிரதட்சிணம் செய்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதன் மூலம் பிரம்மேந்திரா் சுவாமிகள் சாப்பிட்ட இலையில் பக்தா்கள் உருண்டு அவரது ஆசீா்வாதம் பெறுவதாக ஐதீகம்.

இந்நிலையில் இந்த எச்சில் இலைகள் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்திய இலை இல்லை எனவும், எனவே இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி கடந்த 2014-இல் கரூரைச் சோ்ந்த ஒருவர் தொடா்ந்த வழக்கையடுத்து 10 ஆண்டுகளாக எச்சில் இலையில் உருளும் நிகழ்வானது நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில், பாரம்பரிய சடங்கை மீண்டும் நடத்த உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஒரு நீதிபதி அமர்வு, புனித நோ்த்திக் கடனை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டு எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வு நடைபெற்றது.

ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்து, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்