ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா - 2 பேர் கைது
|ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து படம்பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவில் எதிரே உள்ள அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடுகின்றனர்.
அந்த வகையில் ராமேஸ்வரத்திற்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், கடலில் புனித நீராடிவிட்டு அருகே உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றிருக்கிறார். அந்த தனியார் உடை மாற்றும் அறையை பராமரித்து வரும் கண்ணன் என்பவர், இளம் பெண்களுக்கு ஒரு அறை என்றும், வயதான பெண்களுக்கு ஒரு அறை என்றும் பிரித்து அனுப்பியிருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், உடை மாற்றும் அறையின் பராமரிப்பாளர் கண்ணனிடம் இது குறித்து விசாரித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆகியிருக்கிறது. பின்னர் அந்த பெண் உடை மாற்றும் அறைக்கு சென்று பார்த்தபோது, அறையின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்களுக்கு நடுவே மிகச்சிறிய ரகசிய கேமரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட தனியார் உடை மாற்றும் அறையின் பராமரிப்பாளர் கண்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கண்ணன் ஆன்லைன் மூலம் கேமராவை ஆர்டர் செய்து வாங்கியதும், கடந்த 6 மாதங்களாக பெண்கள் உடைமாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டி.எஸ்.பி. சாந்தமூர்த்தி தலைமையில் ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில் உடை மாற்றும் அறை, குளியலறை உள்ளிட்டவற்றில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணன், இதுவரை ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை யாருடனாவது பகிர்ந்தாரா? அல்லது இணையத்தில் பதிவேற்றினாரா? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.