கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
|தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம், டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டித்தீர்த்தது. அதேபோல், நேற்றும் கனமழை காணப்பட்டது.
தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகியமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
* கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
* தஞ்சை மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
* கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.