திருவண்ணாமலையில் கனமழை: செய்யாறில் 400 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
|திருவண்ணாமலையில் நேற்று இடைவிடாமல் கனமழை பெய்தது.
செய்யாறு,
பெஞ்ஜல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. செய்யாறு தொகுதியில் 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள ஏரிகளில் 50 சதவீதம் நீர் உள்ளன.
நிரம்பிய ஏரிகளான முக்கூர், வாழ்குடை, காழியூர், செங்காடு, நாவல், மேல்கொளத்தூர், தவசி, எறையூர், கழனிபாக்கம், தொழுப்பேடு, கடுகனூர், கோகிலாம்பூண்டி, கொருகாத்தூர், வெலுமாந்தாங்கல், வட தண்டலம், பெரும்பள்ளம் உள்ளிட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேறுகிறது. இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் முறையாக கால்வாய்கள் பராமரிக்கப்படாததால் அருகில் இருக்கும் வயல்களுக்குள் பாய்கிறது.
தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 400 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாக விளங்கும் மாமண்டூர் ஏரி நிரம்பி வருவதால் இந்த ஏரியை நம்பி உள்ள 14 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செண்பக தொப்பு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலாம்பாக்கம், வெங்கச்செரி, மாகறல், காவந்தண்டலம், அவளூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.