< Back
மாநில செய்திகள்
நெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கும் கனமழை.. எங்கு எவ்வளவு மழை பதிவு?
மாநில செய்திகள்

நெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கும் கனமழை.. எங்கு எவ்வளவு மழை பதிவு?

தினத்தந்தி
|
13 Dec 2024 12:21 PM IST

நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை,

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் நெல்லை மாநகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம்போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. கே.டி.சி. நகர், கீழநத்தம், திருநெல்வேலி டவுன் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைபோல தென்காசி மாவட்டத்திலும் நேற்று பெய்த மழை தற்போது நீடித்து வருகிறது. பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் அபாய அளவை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கரைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தென்காசியில் குளம் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக செங்கோட்டை - கேரளா சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிகப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 421 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஊத்து பகுதியில் 540 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் பகுதியில் தலா 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செங்கோட்டையில் 24 செ.மீ, தென்காசி நகரப் பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நெல்லை மாவட்ட மழை விவரம்:-

ஊத்து - 540 மி.மீ.

அம்பாசமுத்திரம் - 366 மி.மீ.

மாஞ்சோலை - 320 மி.மீ.

நாலு முக்கு - 310 மி.மீ.

மணிமுத்தாறு - 298 மி.மீ.

பாளையங்கோட்டை - 261 மி.மீ.

சேர்வலாறு அணை - 237 மி.மீ

சேரன்மாதேவி - 225.2 மி.மீ

பாபநாசம் - 150.2 மி.மீ

தென்காசி மாவட்ட மழை விவரம்:-

தென்காசி - 230 மி.மீ

செங்கோட்டை - 240 மி.மீ

ராமநதி அணை - 238 மி.மீ.

சங்கரன்கோவில் 146 மி.மீ.

பாப்பாக்குடி - 233 மி.மீ.

ஆலங்குளம் 307 மி.மீ.

சிவசைலம் 288 மி.மீ.

கடனாநிதி அணை - 260 மி.மீ.

ஆயிக்குடி- 312 மி.மீ.

சிவகிரி- 138 மி.மீ.

மேலும் செய்திகள்