ஈரோடு, கோவையில் பெய்த கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
|தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத்தது.
இந்த மழை காரணமாக கோவை ரெயில்நிலையம் சாலை, மருத்துவமனை சாலை, சுங்கம், ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கோவை லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பலத்த மழை காரணமாக சிவானந்தா காலனி ரெயில்வே சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக நொய்யல் ஆறு வழித்தடத்தில் உள்ள உக்குளம், நரசாம்பதி குளம், பேரூர் பெரிய குளம், உக்கடம் பெரிய குளம் உள்ளிட்ட 24 குளங்கள் நிரம்பின. இதுதவிர மாவட்டத்தில் துடியலூர், தடாகம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குட்டைகள், தடுப்பணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ஈரோடு
இதேபோல் நேற்று காலை 6 மணியளவில் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுவடைந்து, இடி, மின்னலுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்து குளம்போல் காட்சி அளித்தது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், குரும்பேரி கிராமத்தில் ஏரி நிரம்பி வெளியேறி உபரிநீர் மற்றும் மழைநீர், காட்டாற்று வெள்ளம் எக்கூர், ஆண்டியூர், மகனூர்பட்டி கிராமங்களின் வழியாக சென்றது. இந்த காட்டாற்று வெள்ளத்தில், மகனூர்பட்டி அருகே அமைக்கப்பட்டிருந்த தார்சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால், திருப்பத்தூரில் இருந்து சிங்காரப்பேட்டை வழியாக திருவண்ணாமலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியளவில் நாங்குநேரி, ராதாபுரம், நரசிங்கநல்லூர், கருங்காடு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதேபோல் நெல்லை டவுன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.