கனமழை எச்சரிக்கை - பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
|கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.