ராமநாதபுரத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: பள்ளிகள் செயல்படுமா..?
|ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 43.8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
ராமநாதபுரம்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராமேஸ்வரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43.8 செ.மீ. மழை பதிவானது. மேலும் தங்கச்சி மடம்-34 செ.மீ., பாம்பனில் 28 செ.மீ., மண்டபம்- 27 செ.மீ., ராமநாதபுரம்-12.5 செ.மீ.மழை பதிவாகி இருந்தது. இன்றும் அங்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.