தொடர் கனமழை எச்சரிக்கை: 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
|கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ள 'பெங்கல்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காணொலி வாயிலாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் கனமழையின்போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைக்கவும், வெள்ள நீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.