சென்னையில் கனமழை எதிரொலி: அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு திரும்ப அனுமதி
|அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், 4 மணிக்கே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் கனமழை எதிரொலியாக அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், 4 மணிக்கே வீடுகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு, தமிழக அரசு முன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.