கனமழை எதிரொலி: 4 விரைவு ரெயில்கள் ரத்து
|சென்னையில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி விரைவு ரெயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை சென்ட்ரலுக்கு பதில் இன்று இரவு சில ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு, மேட்டுப்பாளையம், கோவை ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும். பெங்களூரு, மங்களூரு, திருவனந்தபுரம் ரெயில்கள் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும். ஜோலார்பேட்டை, ஆலப்புழா விரைவு ரெயில்கள் சென்னை கடற்கரை வழியாக இயக்கப்படும். பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் தெற்கு ரெயில்வே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.