தமிழகத்தில் வாய்க்கால் இல்லாத பாலம் கட்டப்பட்டு உள்ளதா? - அரசு விளக்கம்
|தமிழகத்தில் வாய்க்கால் இல்லாத பாலம் கட்டப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை 'டேக்' செய்து பலரும் தமிழக அரசை வசைபாடியுள்ளனர்.
இதையடுத்து இந்த புகைப்படங்கள் தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் கள ஆய்வில் இறங்கியது. அதில் புகைப்படங்களில் உள்ள வாய்க்கால் இல்லாத பாலம் தென் ஆப்பிரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது பதிவில், "வாய்க்கால் இல்லாமல் பாலம் கட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது. இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. தென் ஆப்பிரிக்காவின் கியானி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணியை தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் கடந்த 7-ந்தேதியன்று கியானி நகராட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.