உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு
|கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் அறுபடை வீடுகளுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இந்த கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது, தன்னுடைய 'ஐபோன் 13புரோ' ரக மொபைல் போனையும் தவறி போட்டுள்ளார். அதன்பின் கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல் போனை திரும்பக் கேட்டுள்ளார்.
அதற்கு கோவில் நிர்வாகத்தினர் உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் அளிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். கடந்த மாதம் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் இருந்து ஐபோன் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தினேசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வந்திருந்தார்.
அப்போது அவர் தனது மொபைல் போனை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'உண்டியலில் போட்டவை முருகனுக்கு சொந்தமாவது. மொபைல் போனை தர முடியாது', வேண்டுமென்றால், மொபைல் போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்து கொள்ளலாம் என்று கூறினர்.
அதற்கு தினேஷ், தன்னிடம் தரவுகளை பெற லேப்டாப் உள்ளிட்டவை இல்லை. ஓரிரு நாளில் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதாக தெரிவித்தார். பின்னர் அந்த ஐபோன் கோவில் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்போரூர் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் திருப்பி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த நிலையில், திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அறநிலையத்துறை விதிகளின்படி ஐபோன் ஏலம் விடப்பட்டது. அதை உரிமையாளர் தினேஷ், ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். நீண்ட நாட்கள் கழித்து தனது ஐபோன் திரும்ப கிடைத்துள்ளதால் உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்தார்.