< Back
மாநில செய்திகள்
கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி: மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி: மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
29 Nov 2024 7:23 AM IST

வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த மாதம் 10-ந் தேதி முதல், வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வணிகர்கள், ஆண்டுக்கு ரூ.1½ கோடி வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

எனவே, வணிகர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் வகையில் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் முழு நேர கடையடைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், இன்று நடக்க இருக்கும் கடையடைப்பு போராட்டம் என்பது தமிழகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மதுரையில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்