அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - சீமான்
|அரசு நிறுவனங்களைத் தனியார் ஆக்குவதும், அரசு ஊழியர்களைத் தற்காலிகமாக்குவதும்தான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தி.மு.க. அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. தி.மு.க. அரசின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஏழை - எளிய மக்களின் மருத்துவச் சேவை தடைபட்டு, உயிரிழக்கும் பேராபத்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் கொடுஞ்சூழல் நிலவுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 வகைப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற கட்டுக்கடங்காத ஊழல் மற்றும் முறைகேடுகளைக் களையும் பொருட்டு, கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தை (MRB – Medical Services Recruitment Board) தொடங்கியது . அதன்படி 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில் 4 முறை தேர்வுகள் நடத்தி எவ்வித குளறுபடிகளின்றி மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2018-க்கு பிறகு தேர்வு வாரியத்தால் நான்கு முறை மருத்துவர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக அத்தேர்வுகள் நடைபெறவில்லை. 2021-ம் ஆண்டுத் தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் அதே அவலநிலையே தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகால தி.மு.க. ஆட்சியில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இதுவரை வெறும் 1,021 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது பெருங்கொடுமையாகும்.
கடந்த 17-11-2023 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாடு முழுவதும் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவித்து ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்று வரை ஒரு மருத்துவர்கள்கூட நியமனம் செய்யப்படவில்லை. தற்போது கடந்த ஓராண்டில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களின் எண்ணிக்கை 3,000ஐ தாண்டிவிட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தற்போது மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உட்பட 14 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடமும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என்பது கொடுமைகளின் உச்சமாகும். அரசு மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி முதல்வர்களை நியமிக்காது தாமதிப்பது ஏன்? என்று ஐகோர்ட்டும் தமிழ்நாடு அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 10,000 மருத்துவர்கள் வெளிவருகின்றனர். ஆனால் 8 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் 19,000 அரசு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஏழை மக்களுக்கு அடிப்படை மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யக் குறைந்தபட்சம் 1,000 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் என்ற இலக்கினை எட்டவே தற்போதுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் 4 மடங்காக உயர்த்த வேண்டிய நிலையுள்ளது. அத்தகைய சூழலில், இருக்கும் மருத்துவப் பணியிடங்களையே நிரப்பாமல் தி.மு.க. அரசு அலட்சியம் செய்வது அதன் மோசமான நிர்வாகச் செயல்பாட்டையே காட்டுகிறது.
அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இன்மையால் தற்போது பணியிலுள்ள மருத்துவர்களின் பணிச்சுமை இருமடங்கு அதிகரித்துள்ளதால், அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இதனால் அரசு மருத்துவச் சேவையில் தடையும், தவறுதல்களும் நடைபெற்று, இறுதியில் மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் கொடுமைகளும் நிகழ்கிறது.
தற்போது, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் முறையான அனுபவம் பெறாத பயிற்சி மருத்துவ மாணவர்களைக் கொண்டே நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. தற்காலிக ஆசிரியர், தற்காலிக மருத்துவர், தற்காலிக செவிலியர், தற்காலிக போக்குவரத்து ஊழியர், தற்காலிக மின்வாரிய ஊழியர் என்று அரசு நிறுவனங்களைத் தனியார் ஆக்குவதும், அரசு ஊழியர்களைத் தற்காலிகமாக்குவதும்தான் மக்கள் நலன் காக்கும் திராவிட மாடலா?
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இல்லை, உபகரணங்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை, நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் இல்லை, மருந்தாளுநர்கள் இல்லை, பல மருத்துவக்கல்லூரியில் முதல்வர்களே இல்லை, நோயாளிகளிடம் லஞ்சம் என மக்கள் நல்வாழ்வுத்துறையை முற்று முழுதாகச் சீரழித்துவிட்டு, திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறையிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் கூறுவது அப்பட்டமான பச்சைப்பொய்யாகும்.
ஆகவே, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசினை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.