அரசு மருத்துவமனை மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லாத ஓர் அவல நிலை உருவாகியுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
|தி.மு.க. அரசு சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே சரியில்லை என்று நான் அடிக்கடி அறிக்கைகள் மூலம் தெரிவிப்பதை நிரூபிக்கும் வகையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை இளைஞர் விக்னேஷ் உட்பட நான்கு பேர் கத்தியால் குத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற மருத்துவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், ரெயில்களில் பயணிப்போருக்கு பாதுகாப்பு இல்லை. பேருந்துகளில் பயணிப்போருக்கு பாதுகாப்பு இல்லை, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பு இல்லை, இன்னும் சொல்லப் போனால் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலைதான் நிலவுகிறது.
அதே சமயத்தில், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகளும் சமூக விரோதிகளும், கொலைகாரர்களும், கொள்ளையடிப்போரும், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, அமைதியை விரும்பும் அனைவரும் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம். தி.மு.க. அரசு சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்காததும், போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாததும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தாததும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் கத்தியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் என்றால், அந்த மருத்துவமனையில் காவல் துறையினரின் பாதுகாப்பே இல்லை என்றுதான் அர்த்தம். மருத்துவமனையின் நுழைவாயிலில் காவல் துறையினர் இருந்திருந்தால், கத்தியை எடுத்துச் சென்ற நபர் தடுக்கப்பட்டிருப்பார். அதன்மூலம், கத்திக் குத்து தாக்குதல் தடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அரசு மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்யாத தி.மு.க. அரசிற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கவும், தாக்குதல் நடத்தியவர்கள்மீது சட்டப்படி வழக்கு தொடுத்து உரிய தண்டனை பெற்றுத் தரவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதிருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.