அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
|பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி நெருக்கடி என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாத கவுரவ விரிவிரையாளர் நியமனத்தை மேற்கொள்வது சமூகநீதிக்கு எதிரானது; தமிழக அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில், இன்றைய நிலையில் சுமார் 8000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கலைக் கல்லூரிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படாதது தான் இத்தகைய அவலநிலை ஏற்படுவதற்கு காரணம். அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், நிலைமையை சமாளிப்பதற்காக மாதம் ரூ.25,000 ஊதியத்தில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் ஏறக்குறைய 75% அளவுக்கு கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது கல்வித்தரத்தை மட்டுமின்றி, கல்லூரிகளின் நிர்வாகத்தையும் கடுமையாக பாதிக்கும். இதை அரசு உணர வேண்டும்.
உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்து வரும் நிலையில், அதைத் தடுக்க புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஜூலை 22ம் தேதி அரசு அறிவித்தது. அதற்கான காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகும் நிலையில், அத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை அறிவிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருப்பது பெரும் துரோகமாகும்.
1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது என்றால், 4000 உதவிப் பேராசிரியர்கள் இப்போதைக்கு நியமிக்கப்படமாட்டார்கள் என்று தான் பொருள் ஆகும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இப்போதே பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. அத்துறைகளில் முழுக்க முழுக்க கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், அவர்களால் நிர்வாகம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.
இப்போதே இந்த நிலை என்றால், நடப்புக் கல்வியாண்டிலும், அடுத்த கல்வியாண்டிலும் பெருமளவிலான உதவிப் பேராசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அதன்பிறகு அரசு கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 1000 உதவிப் பேராசிரியர்கள் கூட இருக்க மாட்டார்கள். அத்தகைய சூழலில் அரசு கலை கல்லூரிகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விடக்கூடும். அப்படி ஒரு நிலையை அரசே ஏற்படுத்தக் கூடாது.
கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்க வேண்டும். ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் சில நூறுகளில் தொடங்கிய கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் இப்போது ஏழாயிரத்தைக் கடந்திருக்கிறது. விதிவிலக்காக இருக்க வேண்டிய கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் விதியாக மாறுவதை அனுமதிக்க முடியாது. கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை; அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்து கொள்வதால் சமூகநீதி படுகொலை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.833 என்ற குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இது மிக மோசமான உழைப்புச் சுரண்டல் ஆகும். நிரந்தரமான உதவிப் பேராசிரியர்களை நியமிப்பது ஒன்று தான் இதற்கு தீர்வாகும்.
பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசின் நிதி நெருக்கடி காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசிடம் பா.ம.க. பலமுறை வினா எழுப்பிய போதிலும் சரியான பதில் கிடைக்கவில்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி நெருக்கடி என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடாது. கல்வி, சுகாதாரம், வேளாண்மை, நீர்மேலாண்மை ஆகிய துறைகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள நிதி தான் பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முடங்குவதைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே, 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 14&ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.