கவர்னர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை வெளியேற வைத்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி
|அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
சென்னை,
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தொடரை முன்னிட்டு சட்டசபைக்கு வருகை தந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை குறிக்கும் வகையில் "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும் சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கவர்னர் புறக்கணித்துச் செல்லவில்லை. அவர் உரையாற்றக் கூடாதென்று திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். கவர்னர் உரை காற்றடித்த பலூன்போன்று இருப்பதை தவிர உள்ளே முக்கியமான கருத்து எதுவும் இல்லை. கவர்னர் உரையில் தி.மு.க. அரசு சுய விளம்பரம் தேடி உள்ளது. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லை. பேசியதையே பேசுகிறது தி.மு.க.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒட்டுமொத்த இந்தியாவே "யார் அந்த சார்?" என்று கேட்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.தான் வழக்கு போட்டது. நீதிமன்றம் தாமாக வழக்கை விசாரிக்கவில்லை. அ.தி.மு.க.தான் வழக்கு தொடர்ந்தது.
ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு கூட போராட்டம் நடத்த அனுமதி கொடுப்பதில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கே இந்த நிலை என்றால் எதிர்க்கட்சிகளின் நிலையை உணர வேண்டும். திட்டத்திற்கு பெயர் மாற்றுவது மட்டுமதான் தி.மு.க. ஆட்சியில் சாதனையாக உள்ளது. போதை மாநிலமாக உள்ளது தமிழகம். போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 500 பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நிலையில் இன்றைய ஆட்சியில் உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.