அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நேரில் ஆய்வு
|சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த பாலியல் பலாத்கார விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை நண்பகல் 12.30 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு, பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவும், பல்கலைக்கழகதின் செயல்பாடுகள் குறித்தும் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி இவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.