< Back
மாநில செய்திகள்
பாரதியாரின் சிலையை பல்லக்கில் தூக்கிச் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

பாரதியாரின் சிலையை பல்லக்கில் தூக்கிச் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
11 Dec 2024 10:49 AM IST

பாரதியார் உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பாரதியாரின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் சிலை பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்துத் துவக்கி வைத்து பல்லக்கை தூக்கி சென்றார். இந்த ஊர்வலம் அங்கு உள்ள மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்றதும் பாரதியாரின் சிலை அங்கு வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளப்பதிவில்,

பாரதத்தாயின் தலைசிறந்த மகன்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியை அவரது பிறந்தநாளில் நன்றியுள்ள தேசம் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறது. மிகத்தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க சுதந்திர போராட்ட வீரர், புரட்சிக் கவிஞர், மிகச்சிறந்த இலக்கிய மேதை, பாலின பேதங்களைக் களைந்து, சமூக நீதியின் அடையாளமாகத் திகழும் சமூக சீர்திருத்தவாதியான பாரதி, ஒவ்வொரு பாரதியருக்கு உள்ளும் உத்வேகமூட்டும் சக்தியாக நீடிக்கிறார்.

அவரது வலிமையான எழுத்துக்கள் பல லட்சக்கணக்கானோரை சுதந்திர போராட்டத்தில் சேர ஊக்குவித்ததோடு, பாரதிய மொழிகள், ஆன்மிகம், கலாசாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியம் குறித்த ஆழமான பெருமையை மீட்டெடுத்தன. பாரதியாரின் வாழ்க்கை, லட்சியங்கள் மற்றும் தொலைநோக்கு ஒரேபாரதம் உன்னதபாரதம் என்ற நோக்கத்தை கட்டியெழுப்ப அசைக்க முடியாத உத்வேகத்தின் ஆதாரமாகத் தொடர்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்