< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தினத்தந்தி
|
16 Dec 2024 8:55 PM IST

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை,

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் நிறுவப்படும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் மசோதாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாகும். ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேர மற்றும் 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் 62 வயது வரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும், தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம். தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் நிறுவப்படுகிறது. விரைவில் ஆணையத்துக்கான தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்