< Back
மாநில செய்திகள்
தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்
மாநில செய்திகள்

தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் - அமைச்சர் சிவசங்கர்

தினத்தந்தி
|
6 Jan 2025 11:36 AM IST

தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை,

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, "அரசின் சாதனைகளை வாசிக்க மனமில்லாமல், ஒரு நாடகத்தை கவர்னர் அரங்கேற்றி உள்ளார். கவர்னர் உரையை வாசித்தால் அரசின் சாதனைகளை அடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர் புறக்கணித்துவிட்டார். நாட்டுப்பற்றுக்கு அவர்கள்தான் குத்தகைதாரர்கள் என்பதுபோல் நடந்து கொள்கின்றனர்.

தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் பெரியவர் என்ற மனநிலையில் கவர்னர் செயல்படுகிறார். தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார். சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். தேசிய கீதம் பாடும்வரை காத்திருக்காமல், தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்