
கோப்புப்படம்
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன்பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க, 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ. 455.32 கோடி மதிப்பீட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் பொருட்டு அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 493 அரசு தொடக்கப் பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
இதன் இறுதி கட்டமாக, சென்னை மாவட்டம் ஒக்கியம் துரைபாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 22,931-வது திறன்மிகு வகுப்பறையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று நிறுவினார். இதனை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன். அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஸ் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் Model Schools எனப் பள்ளிக்கல்வித்துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்! அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.