கோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு
|கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
சென்னை,
கோவை மாநகரில் 40 ஆயிரம் நகை பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தங்கநகை தொழில் வளர்ச்சிக்காக தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்று நகை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் கோவைக்கு கள ஆய்வுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகை தொழில் உற்பத்தியாளர்களிடம் மனுக்களை பெற்றதுடன், செல்வபுரத்தில் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து நகை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவானத் திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 3.41 ஏக்கரில் தங்க நகை தொழில் பூங்கா அமைய உள்ளது.