< Back
மாநில செய்திகள்
வெறிநாய் தாக்குதலுக்குள்ளாகும் ஆடுகள்: கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

வெறிநாய் தாக்குதலுக்குள்ளாகும் ஆடுகள்: கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
17 Feb 2025 8:11 PM IST

தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆடு வளர்ப்பை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். சமீப காலமாக இப்பகுதியில் தொடர் வெறிநாய் தாக்குதலால் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியாகி வருவதாகச் செய்திகள் வருகின்றன. இதனால், ஆடு வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும், தங்களது இழப்பை ஸ்டாலின் மாடல் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றும். இதுவரை மாவட்ட நிர்வாகம் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வெறிநாய்களால் கொல்லப்பட்ட ஆடுகளுக்கு தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு இழப்பீடும் வழங்கவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

சென்ற மாதம், 24.1.2025 அன்று காங்கேயம் வட்டம், மரவபாளையம் கிராமத்திலும், சென்னிமலை ஒன்றியம் எல்லைக் கிராமத்தினுள் பல பகுதிகளிலும் ஆடுகள் வெறிநாய் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளன என்றும், இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களது இழப்புகள் குறித்த புகார்களுக்கு திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என உறுதிக் கடிதம் வழங்கப்பட்டாலும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகள், ஈரோடு பழனி நெடுஞ்சாலையில் பாரவலசு என்ற இடத்தில் சென்ற வாரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகளை கைது செய்து, வலுக்கட்டாயமாக அகற்றியதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், வெறிநாய்களைக் கட்டுப்படுத்தவும் தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில், 16.2.2025 அன்று ஈரோடு மாவட்டம், எல்லைக் கிராமம், குட்டக்காட்டைச் சேர்ந்த விவசாயிகளின் 25 ஆடுகள் வெறிநாய் தாக்குதலுக்கு பலியாகியுள்ளன. பொதுவாக தமிழ்நாடு முழுவதும் வெறிநாய்களின் தாக்குதலால் கால்நடைகள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளும், ஒருசில இடங்களில் பெரியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

வெறிநாய்களால் பாதிக்கப்பட்டு ஆடுகளை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், வெறிநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்