< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் கடல் நடுவில் கண்ணாடி பாலம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் நடுவில் கண்ணாடி பாலம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

தினத்தந்தி
|
30 Dec 2024 6:51 AM IST

கன்னியாகுமரியில் கடல் நடுவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் கம்பீரமாக காட்சி தரும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இதனையொட்டி அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் 2 நாட்கள் விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

வெள்ளி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். பின்னர் அவர், மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு பாதமலருக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர், திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும், பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள் அங்காடியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு அய்யன் திருவள்ளுவர் உருவச்சிலை படகு குழாமுக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-டி லேசர் காட்சியையும், வீடியோ படக்காட்சியையும் கண்டுகளிக்கிறார். அதைத்தொடர்ந்து திருக்குறள் நெறி பரப்பும் 25 தமிழ் அறிஞர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.

2-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்று பேசுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, சிங்கப்பூர் மந்திரி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டியும், சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டியும், திருவுருவச் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார்.

அய்யன் திருவள்ளுவர் பசுமை பூங்காவை திறந்து வைத்தும், திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். பின்னர் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா கோலாகலமாக நடைபெறுகிறது என்பதால் கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்